2008 தமிழக மருத்துவத்துறையில் ஒரு மைல் கல் ஆண்டு என்று சொல்ல வேண்டும். தமிழகத்தில் அதுவரை நடந்து வந்த, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உடல் உறுப்பு தான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டன. விதிகள் கடுமையாக்கப்பட்டு, ஏழைகளும் பயன் பெறும் வகையில் ஒரு சமதர்ம சட்டமாக அமைந்தது அது. பணத்துக்காக ஏழைகள் தங்கள் உடல் உறுப்புகள் – மிக முக்கியமாக கிட்னி விற்பது போன்றவை தடை செய்யப்பட்டன. அதே ஆண்டு, டாக்டர்கள் புஷ்பாஞ்சலி, அசோகன் தம்பதியனரின் மகன் ஹிதேந்திரன் சாலை விபத்தில் மரணமடைய, அவன் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினார்கள். அது உடல் உறுப்பு தானம் பற்றிய பெரும் விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்தியது.

இன்று தமிழகம், உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில், இந்தியாவின் முண்ணனி மாநிலம். இந்தியா முழுதும் நடைபெறும் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளில்,கிட்டத்தட்ட 50%, தமிழகத்தில் நடைபெறுகிறது. வருடத்துக்கு 5000 க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி நிகழ்கிறது.

சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகள் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தை, தந்தி தொலைக்காட்சி நடத்தியது.

கடந்த பத்தாண்டுகளில், தொலைக்காட்சியில் நிகழ்ந்த மிகச் சிறந்த விவாதங்களில் ஒன்று. இந்த விவாதத்துக்கான துவக்கம், இந்த சிகிச்சையில் முறைகேடுகள் நடக்கின்றன என தேசிய உறுப்பு சிகிச்சை மாற்ற நிறுவனத்தின் இயக்குநர், விமல் பண்டாரி வைத்த குற்றச்சாட்டு. அவர், தமிழகத்தில் 25% இருதய மாற்று அறுவை சிகிச்சைகளும், 33% நுரையீரல் அறுவை சிகிச்சைகளும் வெளிநாட்டவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கின்றன, இதில் ஏதோ சரியில்லை (something fishy) எனப் பேசியதாக, தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்த்து.

http://www.thehindu.com/news/cities/chennai/organ-transplant-racket-surfaces-in-tamil-nadu/article24139506.ece

http://www.thehindu.com/news/national/tamil-nadu/three-of-four-hearts-harvested-were-given-to-foreigners/article24139531.ece

இந்த சர்ச்சைக்கு முன்பாக, தமிழக உறுப்பு மாற்று சிகிச்சை நிறுவனத்தின் செயலராக இருந்த டாக்டர் பாலாஜி விலகியிருக்கிறார். இவர் தான் அப்போல்லோ மருத்துவமனையில், முதல்வர் ஜெயலலிதா கைரேகை வைத்ததை உறுதிசெய்தவர் என்பதும், இவர் காலத்தில், சசிகலாவின் கணவர் நடராஜன் உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டார் என்பதும் இன்னும் சந்தேகங்களைக் கிளப்பக் கூடியது.
இந்தப் பிண்ணணியில் தான், தந்தி தொலைக்காட்சியின் இது பற்றிய விவாதம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த விவாதத்தின் துவக்கத்தில், மக்கள் நலத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டு, அரசின் தரப்பை மிகத் தெளிவாகப் புள்ளி விவரங்களை வைத்தது, உறுப்பு மாற்று முறையில் தமிழகத்தின் முன்னேற்றத்தை புள்ளி விவரங்களோடு முன் வைத்து, குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டார். தானும், மருத்துவத்துறை இயக்குநர் டாக்டர்.ராதாகிருஷ்ணனும், விமல் பண்டாரியிடம் நேரில் பேசினோம் எனவும் சொல்லி, விமல் பண்டாரி, தான் சொன்ன செய்தி வேறு மாதிரி சித்தரிக்கப்பட்டுவிட்டது எனவும் சொன்னதாகச் சொன்னார். உறுப்புகளைத் தானம் செய்வது, மிகப் பெரும் தியாகத்தோடு, மரணமடைந்த குடும்பத்தினர் எந்தப் பலனையும் எதிர்பாராமல் செய்வது. எனவே இது பற்றிய தவறான தகவல்கள், இனிமேல், உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களிடையே மனத்தடையை ஏற்படுத்திவிடும். எனவே, தந்தி தொலைக்காட்சியும் மற்ற ஊடகங்களும், இதைத் தெளிவு படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பேசினார். பொறுப்பான செயல்.

ஆனால், டாக்டர் பாலாஜி எப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் செயலராக நியமிக்கப் பட்டார் எனவும், பின் ஏன் சமீபத்தில் விலகினார் எனவும் தந்தி டிவி நிகழ்ச்சி நடத்துனர், அமைச்சரிடம் கேட்கவில்லை.

இந்த விவாதத்தில், தமிழக உறுப்பு மாற்று சிகிச்சை நிறுவனத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், பெரும் நிபுணருமான மருத்துவர் அமலோற்பவ நாதன் கலந்து கொண்டது, இந்நிகழ்ச்சிக்கு வலு சேர்த்தது.

அவர் தனது உரையை, தமிழக உறுப்பு மாற்று நிறுவனமும், சட்டமும் இயற்றப் பட்ட சமீப காலச் சரித்திரத்தில் இருந்து துவங்கினார்.. 90 களின் இறுதியில், சென்னையில், சிறுநீரக மாற்று சிகிச்சையில் பெரும் ஊழல்கள் இருந்தது. ஏழைகள், பணத் தேவைக்காகத், தங்கள் உடல் உறுப்புகளை விற்ற அவலம் பெரிதாக இருந்தது.. வில்லிவாக்கம், கிட்னி வாக்கம் என்றே அழைக்கப்பட்டது.

இதை சட்ட மயமாக்க, 2008 ஆம் ஆண்டு, உடல் உறுப்பு தான சட்டம் இயற்றப் பட்டு, பின்னர், Transplantation Authority of Tamilnadu (TRANSTAN) என்னும் நிறுவனம் உருவாக்கப்பட்டு, உடல் உறுப்பு சிகிச்சைகள் மக்கள் நலனுக்காக எனக் கொண்டு வரப்பட்ட்து. அதாவது, மூளைச் சாவு அடைந்த மனிதர்களின் உடல் உறுப்புகள் ஒரு வெளிப்படையான திட்டத்தின் அடிப்படையில், உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்த அமைப்பின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம், முதலில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டு, இதற்கான விதிமுறைகள் மிகத் தெளிவாக இயற்றப்பட்டன. மூளைச்சாவு அடைந்தவர்களின், உடல் உறுப்புகள், அவர்களின் குடும்பத்தால் அனுமதி கொடுக்கப்படும் பட்சத்தில், அவை, சமூகத்தின் பொதுச்சொத்து எனச் சட்டம் சொன்னது. நிச்சயமாக, தமிழர்கள் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

உடல் உறுப்பு வேண்டும் நோயாளிகள், முதலில், ட்ரான்ஸ்டானில் தங்கள் தேவையைப் பகிர்ந்து கொள்வார்கள். இது அரசு மருத்துவர்களின் பரிந்துறையில் பேரில் தான் நடக்கும். பின்னர், மூளைச் சாவுகள் நிகழும் போது, மருத்துவர்கள் அவர்கள் குடும்பங்களை அணுகி, மரணமடைந்தவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பார்கள். அவர்கள் அனுமதி கிடைத்த்தும், 4 பேர் கொண்ட மருத்துவர் குழு, (அதில் ஒரு நரம்பியல் நிபுணரும் இருக்க வேண்டும்), முதலில் மூளைச் சாவு என்பதை, அவர்கள் 11 டெஸ்ட்கள் மூலம் உறுதி செய்து, அந்த ரிப்போர்ட்டில் கையெழுத்து இடுவார்கள், தங்கள் மருத்துவ ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணுடன். பின்னர், ஆறு மணி நேரம் கழித்து, அந்த டெஸ்ட்கள் மீண்டும் ஒரு முறை எடுக்கப்பட்டு, அதே நான்கு மருத்துவர்களால், சான்றுரைக்கப் பட்டு, அதன் பின்னரே மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள், உடலில் இருந்து எடுக்கப்படும்.

உலக அளவில், மூளைச்சாவு அடைந்ததை ஒரு மருத்துவர் சான்றுரைத்தாலே போதும் – ஆனால், நம் நாட்டில், விதிகள், அதுவும் ஏழைகளாக இருக்கும் பட்சத்தில், மீறப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், நான்கு மருத்துவர்கள் என்னும் பாதுகாப்பு விதி ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், அந்த உறுப்புகள் மிக விரைவாக, பயனாளிகள் இருக்கும் மருத்துவமனைகளுக்குச் சென்றைடைவது மிக அவசியம். அதற்காக, பசுமை வழி என்னும் முறையும் சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்டது. அதாவது, அந்த உறுப்புகள் மிக விரைவாக பயணாளிகளைச் சென்றடைய ஏற்றவாறு, அந்த வழி முழுக்க போக்குவரத்து சட்டபூர்வமாக நிறுத்தப்படும். இதையொட்டிய சில திரைப்படங்களும் பின்னர் வந்தன.

இதில் பயன்பெறும் ஏழைகள், முதல்வர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் இலவசமாக இந்த சிகிச்சைகளைப் பெறுகிறார்கள் (இருதய மாற்று அறுவை சிகிச்சை 35 லட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியது) என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம்.

துவக்க காலத்தில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெருமளவு இருந்தது. அப்போது, வெளிநாட்டு நோயாளிகள் இருந்தனர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். ஆனால், பத்து வருடங்களுக்குப் பிறகு, உள்நாட்டுத் தேவையே மிக அதிகமாகிவிட, இன்று வெளிநாட்டு நோயாளிகளே சிறுநீரக அறுவை சிகிச்சை காத்திருப்போர் பட்டியலில் இல்லை. அதே போல், துவக்கத்தில் ஈரல் மாற்று அறுவை சிகிச்சையிலும் அப்படித்தான். இதற்குக் காரணம், முதல் முதலில் இங்கே செய்யப்படும் போது, நோயாளிகளுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையும், இந்த சிகிச்சை பெரும்பாலும் பெரு நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுவதும் தான். அவை, தமிழகமெங்கும் பரவலாகி, பெருமளவு அரசு மருத்துவமனைகளிலும் நடக்கும் போது, வெளிநாட்டவர் பட்டியல் காணாமலாகி விடும்.

ஒப்பு நோக்குகையில், இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மிகவும் சிக்கலானவை. எனவே, அதைச் செய்ய நம்மிடம் இருக்கும் மருத்துவ வசதிகளை விட, மூளைச் சாவு அடைந்த மனிதர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. மக்களிடம், இந்த மாற்று அறுவை சிகிச்சைகளை பொது மருத்துவமனைகளில் செய்யலாம் என்னும் நம்பிக்கை இன்னும் வரவில்லை. எனவே, வெளிநாட்டு நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளில், மிக அதிக பணம் செலவு செய்து கொள்ள முன்வருகிறார்கள். எனவே, இன்று இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் வெளிநாட்டவர்களுக்குச் செய்யப் படுகின்றன. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின், இந்த அறுவை சிகிச்சைகள் மிக சகஜமாக தமிழகமெங்கும் செய்யப்படும் போது, இது மறைந்து விடும்.
மேலும், இந்த அறுவை சிகிச்சையில், உறுப்புகள் வழங்க பல விதிகள் உள்ளன. முதலில், அரசு மருத்துவமனைகளில் காத்திருப்போர்கள், அதன் பின் மற்ற தமிழக மருத்துவமனைகள், பின்னர், தென் இந்தியா, அதன் பின், முழு இந்தியா என பார்க்கப் பட்டு, அவற்றில் யாருக்கும் தேவையில்லை எனும் போதுதான், வெளிநாட்டவர்களுக்குத் தரப்படும். இந்த விதிகள் தெளிவாகக் கடைபிடிக்கப் பட்டு, அதற்கான ஆதாரங்கள் இருக்கும். தவறுகளோ, விதி மீறல்களோ இருந்தால், அதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் தொழில் அனுமதி ஆயுளுக்கும் மறுக்கப்படும் என்பதால், இது நடந்திருக்கும் வாய்ப்புகள் இல்லை என்பது மருத்துவர் அமலோற்பவ நாதனின் தரப்பு.

இந்து வெளியிட்டிருக்கும் அந்தச் செய்தி தெரிந்தோ தெரியாமலோ, சிக்கலாகச் சொல்லப் பட்டிருக்கிறது. முதல் பகுதியில், சென்னையில் 4 இதய மாற்று அறுவை சிகிச்சையில், 3, வெளிநாட்டவருக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது என்று சொல்கிறது(இது 75% சதவீதமாகும்). அதே செய்தியில், கீழே, 2017ல், வெளிநாட்டவர்களுக்கு, 31 இருதய மாற்று, 32 நுரையீரல் மாற்று மற்றும் 32 நுரையீரல்/இருதய மாற்று நடந்திருக்கிறது. இந்தியர்களுக்கு 91 இருதய மாற்று, 75 நுரையீரல் மாற்று மற்றும் 6 இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று நடந்திருக்கிறது என்றும் ஒரு புள்ளிவிவரம் இருக்கிறது. அப்படி எனில் சென்னையில் மட்டும் ஏன் மிக அதிக சதவீதம் வெளிநாட்டவர்கள்? ஏனெனில், வெளிநாட்டில் இருந்து வரும் நோயாளிகள், இந்திய மருத்துவச் சுற்றுலாவின் முண்ணனி நகரம் எனச் சொல்லப்படும் சென்னைக்குத் தான் வருவார்கள்.. கோவையிலோ மற்ற சிறு ஊர்களிலோ, அவர்கள் வந்து இந்த சிகிச்சைகள் பெற்றுக் கொள்வது குறைவாக இருக்கும்.

வெளிநாட்டவர்கள் பயன் பெறுவது, இருதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் பரவலாக மற்ற ஊர்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் நடக்கும் போது குறைந்துவிடும் என்பதே மருத்துவர் அமலோற்பவநாதன் வைக்கும் வாதம். சிறு நீரகம் மற்றும் ஈரல் மாற்று அறுவை சிகிச்சைகளிலும், இதே ட்ரெண்ட் இருந்த்தை, புள்ளி விவரங்களோடு நம் முன் வைக்கிறார்.

வெளிநாட்டவருக்குச் செய்த இருதய மாற்றுகள் போக, மாற்றுவதற்கு நோயாளிகள் இல்லாமல், உறுப்புகள் வீணடிக்கப் பட்ட சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது. இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சைகள், பரவலாக அரசு மருத்துவமனைகளிலும் நிகழும் காலத்தில், இந்த வீணடிப்புகளும் குறையும். எந்த ஒரு புதுத் தொழில்நுட்பமும், முதலில் தனியார் மருத்துவமனைகளில் தாம் துவங்கும் – ஏனெனில், அதற்கான பெரும் வசதிகளும், ரிஸ்க் எடுக்கும் மனப்பான்மையும், அங்கே அறுவை சிகிச்சை செய்துகொள்ள வருபவர்களும் இருப்பார்கள்.. இது பின் மெல்ல அரசு மருத்துவமனைகளிலும் வரத்துவங்கும். இப்படித்தான் இந்த தொழில் நுட்பம் பரிணாம வளர்ச்சி பெற்று ஏழைகள் பயன் பெறத்துவங்குவார்கள்.

வெளிநாட்டவருக்கு உடல் உறுப்புகள் விற்பனை.. தமிழக மருத்துவத்துறையில் ஊழல் என மாலை நேர வம்புச் செய்தியாகிவிடக் கூடிய ஒரு விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை இதை விட தெளிவாக விளக்கிவிட முடியாது. டாக்டர் அமலோற்பவ நாதன் போன்ற தகுதியும், தெளிவும் வாய்ந்த முன்னோடிகள் தமிழகத்தில், இது போன்ற நவீன திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள் என்பதே தமிழகத்தின் அரசமைப்பின் திடத்துக்குச் சான்று. நம் பெருமிதம். குடத்தில் விளக்காய், இவர் போன்ற முன்னோடிகள் தொலைகாட்சி காண் நல்லுலகிற்கு அதிகம் தெரிய வருவதில்லை என்பது சோகம்.

இந்த விவாதத்தில், மருத்துவர் மற்றும் ஊடகவியலாளர் சுமந்த் ராமன், பாமக அரசியல்வாதி வினோபா மற்றும் பொதுமக்கள் பிரதிநிதி புண்ணியகோடி என்பவரும் கலந்து கொண்டனர். சுமந்த் ராமன், ட்ரான்ஸ்டானின் நிக்ழ்வுகள் இப்போது ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. இதை மிகவும் வெளிப்படையாக பொது மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இந்த காத்திருப்போர் பட்டியலையும், ஒவ்வொரு முறை, ஒருவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த்தும், மற்றவர்களின் காத்திருப்பு எண் குறைவதையும், மிக வெளிப்படையாக வைக்க வேண்டும் என்னும் வாதத்தை முன்வைத்தார். இதை ஆதரித்த டாக்டர் அமலோற்பவ நாதன், இந்த உறுப்பு மாற்று நிறுவனத்தை, ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக, தேர்தல் ஆணையம் போல மாற்றி, அதில் நிபுணர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சட்ட நிபுணர்கள் போன்ற ஒரு குழுவின் மூலம் அதன் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்பட/ கண்காணிக்கப் படவேண்டும் என்னும் தனது ஆலோசனையை முன்வைத்தார். இந்தக் குழு தேர்ந்தெடுக்கப்படுவதிலும், மிகச் சரியான விதிமுறைகள் பின்பற்றப் படவேண்டும் என்பதும் அவர் கருத்து.

அதன் பின்னர் வினோபா வைத்த வாதங்களில் அரசியல் தாண்டி, மிக முக்கியமானது, ஒருவர் மூளைச் சாவு அடைந்ததை உறுதி செய்ய functional MRI செய்வதில்லை. இது அகில உலக நியதி என்னும் வாதத்தை வைத்தார். மிகத் தெளிவாக, அமலோற்பவ நாதன், MRI, EEG போன்ற எந்த டெஸ்டுமே தேவையில்லை. இது உலக நியதியுமல்ல என்பதை ஆணித்தரமாக முன்வைத்தார். இது மிக முக்கியம். இணைய அறிவியற் துறை கொழுந்துகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை.

வினோபா மேலும், டாக்டர் பாலாஜி என்பவர், உறுப்பு மாற்று சிகிச்சை நிறுவனத்துக்கு நியமிக்கப் பட்டதையும், அவர் பதவி விலகியதையும் அடுத்த முக்கியமான வாதமாக முன்வைத்தார். இந்தக் கேள்வி மிக முக்கியமான ஒன்று. இது பொது விவாதப் பொருளான நிலையில், அரசு இன்னொரு முறை, இது போன்ற ஒரு விஷயத்தைச் செய்ய வாய்ப்புகள் குறைவு என்னும் வகையில், வினோபாவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோல், பொதுமக்கள் தரப்பில் இருந்து பேசிய புண்ணிய கோடி, மூளைச் சாவு அடைந்த மனிதர்களை தனி விமானம் / அல்லது ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரும் அளவுக்கு பண வசதியில்லாததால், வெளிநாட்டவர் பலன் பெறுகிறார்கள் என்னும் ஒரு வாதத்தை முன்வைத்தார். துரதிருஷ்டவசமாக, இந்தப் புள்ளி, விவாதச் சந்தடியில், கவனிக்கப் படாமல் போயிற்று.
விவாதத்தின் இறுதியில், முத்தாய்ப்பாக, மருத்துவர் அமலோற்பவநாதன், மக்கள் நலம் என்பது மாநில உரிமையின் கீழ் வருவது. தமிழகம் இந்தத் துறையில் மிக மேன்மையாகச் செயல்படுகிறது. இதில் தில்லியின் வழிநடத்தல் தேவையில்லை என்று முடித்தார். மிகக் காட்டமான வாக்கியம். இதில் சொல்லாமல் விடப்பட்ட அரசியல், கவனிக்கப்பட வேண்டியது.

ஒரு விவாதம் வெற்றிகரமாக நடத்தப் படுவதற்கு முக்கிய தேவை, அந்த விவாதம் நடக்கும் துறையின் உண்மையான நிபுணர்கள். அதைத் தாண்டி, விவாதப் பொருள் பாதிக்கும்/ நடக்கும் சமூகத்தின் பிரதிநிதிகள். இந்த இரண்டுமே நன்கு அமைந்து, மிக அர்த்தமான விவாதமான, தீர்வுகளை நோக்கிச் சென்ற முக்கிய நிகழ்ச்சி இது. தமிழக அரசு நிர்வாகிகளால் கவனிக்கப் பட்டு, மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப் படும் சாத்தியங்களை அல்லது குறைந்த பட்சம் பெரும் நிர்வாகத் தவறு நடக்காமல் இருக்கும் சாத்தியங்களை இந்த விவாதம் உருவாக்கியிருக்கிறது. தந்தி டி.விக்கும், நிகழ்ச்சி நடத்திய ஹரிஹரனுக்கும் வாழ்த்துகள். மக்களாட்சியின் நாலாவது தூண் தன் கடமையைச் சரிவரச் செய்திருக்கிறது.

90களில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், பணத்தாசை காட்டி, ஏழை மக்களிடம் இருந்து உறுப்புகளைச் சூறையாடின. அப்போதுஅதைத் தடுக்க சட்டமில்லாமல் இருந்தது. 2008 ல் தமிழக அரசு இயற்றிய சட்டம், இந்தச் சூறையாடலை பெருமளவு கட்டுப்படுத்தியது. உயிருள்ள மக்கள் சிறு நீரகம் தருவதற்கான வழிமுறைகளைச் செம்மைப் படுத்தியது. மூளைச் சாவு அடைந்த மனிதர்களிடம் இருந்து உறுப்புகள் பெறுவதையும், காத்திருப்போருக்கு, ஒரு வெளிப்படையான சட்டம் மூலம், உறுப்புகளைச் சமூகத்தின் சொத்தாக கருதிக் கொடுப்பதையும் செய்தது.. சமீப காலத்தில், அதில் விதிகள் வளைக்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதை முன்னெடுத்து மேன்மையை நோக்கிச் செல்லும் ஒரு செயலாக இந்த விவாதத்தைப் பார்க்கிறேன். ஒரு தமிழனாக, தமிழக அரசும், அதன் முன்னோடி நிர்வாகிகளும் செய்த செயற்கரிய செயல் எனப் பெருமிதம் கொள்கிறேன்.