– Reproduced from BBC Tamil News

தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வு நடைபெற்றால், “அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவமனைகளில் மனித ஆற்றல்கள் குறைந்துவிடும். சிறந்த வல்லுநர்களே இருக்க மாட்டார்கள்” என்கிறார் தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவரும் குழந்தைகள் நல மருத்துவருமான ரெக்ஸ் பீட்டர்.

மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் முடிவுகளை சிபிஎஸ்இ ஜூன் 4ஆம் தேதியன்று வெளியிட்டது. அதில் அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

676 மதிப்பெண்கள் பெற்று 12வது இடத்தை பிடித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா. தமிழகத்தில் மொத்தம் நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர். அதில் 45, 336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் முடிவுகள் எதிர்பார்த்ததுதான்…

“நீட் முடிவுகள் இப்படி இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். நீட் என்றைக்கும் தமிழகத்துக்கு பாதகமாகதான் இருக்கும்” என்று கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் ரெக்ஸ்.

இது இப்போது தெரியாது, ஐந்து வருடங்கள் கழித்துதான் தெரியும். தமிழகத்தில் மருத்துவமனைகளை கவனித்து கொள்ள ஆள் இருக்காது, என்கிறார் அவர்.

“தற்போது தமிழகத்தில் 24 மருத்துவ கல்லூரிகள் மற்றும் 1500 ஆரம்ப சுகாதார மையங்கள் அனைத்திலும் தகுதியான மருத்துவர்கள் உள்ளனர்” என்று குறிப்பிடும் ரெக்ஸ் இந்தியாவில் மற்ற மாநிலங்களை பார்க்கும்போது, மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக கூறுகிறார்.

இந்நிலையில், “பிகார், டெல்லி போன்ற பகுதிகளில் பி எச் டிக்காக தமிழகம் வந்து சேவை செய்பவர்கள், இங்கு இருக்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதையே விரும்புவார்கள். அப்படி இருக்க தமிழகத்தின் தரம் இன்னும் 5 ஆண்டுகளில் குறைந்துவிடும்” என்கிறார் ரெக்ஸ்.

“தமிழக சுகாதாரத்துறையை தகர்க்க நினைக்கிறது பா.ஜ.க”

“அதைதான் பாஜக விரும்புகிறது. கார்டியாலஜி, கேன்சர் குறித்த சிகிச்சைகள், பல்மனாலஜி போன்ற துறைகள் ஏற்கனவே தனியாரிடம் கொடுக்கப்பட்டு வருகிறது. அனைத்தையும் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்க விரும்புகிறது பா.ஜ.க. அப்படி செய்யும்போது, தமிழகத்தில் எதிர்பார்த்த தரம் குறையும் போது, போதிய மருத்துவர்கள் இல்லை, ஸ்பெஷலிஸ்டுகள் இல்லை எனக்கூறி கார்டியாலஜி மட்டுமில்லாமல் பொது மருத்துவம், தாலுகா மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றை தனியாருக்கு ஒப்படைக்கிறோம் என்று சொல்வார்கள்” என்று அவர் கூறுகிறார்.

மத்திய அரசானது சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறதாகவும் ரெக்ஸ் குற்றஞ்சாட்டுகிறார்.

இதனை எதிர்த்து தமிழக மக்கள் அகில இந்திய அளவில் அமைதியாக போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். இன்னும் அரசியல் ரீதியாக சொல்லப்போனால், மத்தியிலும் மாநிலத்திலும் அரசாங்கங்கள் மாற வேண்டும் என்கிறார் ரெக்ஸ்.

ஏனெனில் நீட்டை எடுத்துக் கொண்டால், அதில் முதலாவதாக பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“தமிழகத்தின் சுகாதாரத்துறையை தகர்க்க நினைக்கிறார்கள். இதனை எதிர்த்து தமிழக மக்கள்தான் போராட வேண்டும்” என்று அவர் கூறினார்.

தமிழகத்துக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு வைக்கலாமே…

மேலும், ப்ளஸ் டூ முறையில்தான் இங்கு பல ஆண்டுகளாக தேர்ச்சி நடைபெற்று வந்தது. இப்போது அதையும் தவிர்த்து மற்றொரு தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு கடினமானது.

“தற்போது பாடத்திட்டங்களின் தரத்தை மாநில அரசு உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கதுதான். இதை வைத்து தமிழகத்துக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு வைக்கலாமே என்று கூறும் ரெக்ஸ், ஐ ஏ எஸ் தேர்வு மாதிரி அகில இந்திய அளவில் இதனை நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை என்கிறார்.

நீட் தேர்வுக்கு தனி பயிற்சி தேவைப்படுகிறது. குறைந்தது 2 லட்சம் செலவாகிறது. பல மாணவர்களுக்கு இது எட்டாக்கணியாகி விடுகிறது என்பதையும் ரெக்ஸ் குறிப்பிடுகிறார். யாரிடம் காசு இருக்கிறதோ அவர்கள் மட்டுமே இந்த பயிற்சியை பெற முடிகிறது. இது ஒரு பெரும் பின்னடைவு என்கிறார் அவர்.

“ஆரோக்கியமான முன்னேற்றம்”

நீட் முடிவுகள் குறித்து தனியார் பள்ளியின் தாளாளர் ஜெயேந்திரன் பிபிசியிடம் பேசிய போது, முதல் 50 இடங்களில் தமிழகத்தின் ஒரே ஒரு மாணவிக்கு மட்டும் இடம் கிடைத்திருப்பது சற்று ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். ஆனால், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம் என்று ஜெயேந்திரன் கூறினார்.

“நீட் தேர்வை எதிர்கொள்ள மனதளவில் தமிழக மாணவர்கள் தயாராகி விட்டார்கள் என்பதை இது குறிப்பிடுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 11ஆம் வகுப்பு தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் ஜெயேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல, பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வின் தேதி முறைகளையும் தமிழக அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இந்தாண்டில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் பார்தோமேயானால் மார்ச் ஒன்றாம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கின. தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதிதான் தேர்வுகள் நிறைவடைந்தன. ஆனால், ஆந்திராவில் மார்ச் 19ஆம் தேதியே முடிவடைந்துவிட்டது. ஆதலால், மாணவர்களுக்கு கால அவகாசமும் அதிகம் கிடைக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.