கல்வியைப் பற்றிய விவாதங்கள், அதிலும், உயர் கல்வியைப் பற்றி வரும்போதெல்லாம், கூடவே, தரம் என்னும் கருதுகோளும் வந்து விடுகிறது.. உயர் தரக் கல்வி என்பது, மிகக் கடினமான நுழைவுத் தேர்வுகளால் வடிகட்டப் பட்டுத் தேர்ந்தெடுக்கப் படும் மாணவர்களைக் கொண்டு உருவாக்கப் படுவது என்னும் ஒரு பொதுப்புரிதலை, சமூகம் கொண்டுள்ளது.

இதன் எதிர்மறைக் கருதுகோளும் உண்டு – அதாவது, எல்லோரையும் அரவணைக்கும் கல்வி, தரமானதாக இருக்க முடியாது என்பது அது.

இத்தகைய ஒரு பின்புலத்தில் தான், ஆர்.எஸ்.நீலகண்டன், The wire என்னும் இணைய பத்திரிகையில் எழுதியிருக்கும், “why Tamilnadu hates “NEET”? என்னும் கட்டுரையை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ().

https://thewire.in/education/tamil-nadu-neet

2017 ஆம் ஆண்டு, “நீட்” தேர்வினால், பாதிக்கப் பட்டு மரணமடைந்த அனிதாவின் பார்வையில் இருந்து பேசுகிறது.

பெண் கல்வியில், தமிழகம், இந்தியாவில் முண்ணனியில் உள்ள ஒரு மாநிலம்.  பள்ளிக் கல்வியில் இருந்து உயர் கல்விக்கு செல்லும் சதவீதம் 44.3% – இது இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம். உலக சராசரியை விட, 10% அதிகம். எனில், பள்ளிக்குச் செல்லும் மாணவி,  பட்டதாரியாகும் வாய்ப்பு, அவள் தமிழகத்தில் பிறந்திருந்தால், உலகிலேயே மிக அதிகம்.

அனிதா போன்ற ஒரு ஏழைப் பெண், இந்தியாவின் பின் தங்கிய மாநிலத்தில் பிறந்திருந்தால், அவர் பள்ளிக்கே சென்றிருக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் நிலவும் கல்விக் கட்டமைப்பு, அவரை, மருத்துவராகவே ஆக்கியிருக்கும். அந்தச் சாத்தியத்தை, ‘நீட்” தடுக்கிறது என்கிறார்.

இது, தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு அரசின் கொள்கையினால் வருகிறது. இந்தச் சமூக ஒப்பந்த்தை, “நீட்” தேர்வு குலைக்கிறது என்பதே அவர் வாதம். உலகெங்கும், இது போன்ற உயர் கல்விகளுக்கு,  வடிகட்டும் தேர்வுமுறைகளை விட, பள்ளி யில் பெறும் மார்க்குகளும், க்ரேடுகளும் மேலானவை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன என்கிறார். ”நீட்” போன்ற தேர்வுகளின் வெற்றி, ஒரு மாணவரின் சமூக நிலை, தனியார் கோச்சிங் உதவி போன்றவற்றின் உதவியோடு எட்டப்படுவது தான் என்கிறார்.

மிக முக்கியமாக, ஒரு கொள்கையின் வெற்றி, அதன் சமூகப் பயன்பாட்டில் இருக்கிறது. தமிழகம், தமிழகம் மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாரத் துறைகளில், நாட்டின் மிக முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. எனவே, பள்ளியிறுதி மதிப்பெண் அடிப்படையில், மிக வெளிப்படையாக, ஊழலின்றி நடத்தப்படும், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான தேர்வு முறை, தரமான மருத்துவர்களைத் தான் உருவாக்கி வந்திருக்கிறது. எனவே, தமிழகத்துக்கு இந்தத் தேர்வு தேவையில்லை என்பது நீலகண்டனின் வாதம்.

இந்தக் கட்டுரையைத் தாண்டி, சில கருத்துக்களையும் வைக்கலாம் எனக் கருதுகிறோம். தமிழக அரசுப் பாடத்திட்டத்தின் தரம் குறைவு என்றும், தமிழகப் பாடத்திட்டம், மனப்பாடம் செய்யும் முறையை ஊக்குவிக்கிறது என்றும் விமரிசனங்கள் வைக்கப்படுகின்றன. எந்த ஒரு பொதுத் திட்டமும், கொள்கையும், விமரிசனத்துக்கு உட்பட்டு மேம்படுத்தப் பட வேண்டும் என்பது உண்மையே. ஆனால், வெளியில் இருந்து, வேறொரு பாடத்திட்டத்தில் இருந்து வரும், தமிழகப் பாடத்திட்டத்தில் இல்லாத ஒரு வடிகட்டும் முறைத் தேர்வான ‘நீட்’, அதன் தீர்வல்ல.

மருத்துவ உயர் படிப்பில், தமிழக ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, 50% ஒதுக்கீடு உள்ளது. மருத்துவக் கவுன்சில், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. இதனால், இளநிலை மருத்துவம் முடித்த மருத்துவர்கள், இனி, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணி புரிய முன் வரமாட்டார்கள். தமிழகச் சுகாதாரத் துறையின் முதுகெலும்பே, ஏழை மற்றும் ஊரக மக்களுக்கான இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்கள் தாம். இந்தக் கொள்கையினால்,  தமிழகச் சுகாதாரக் கட்டமைப்பு மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகும்  எனவும் அஞ்சப் படுகிறது.

சாமனிய மனிதனின் பார்வையில் இருந்து, அரசின் கொள்கையை நோக்கும் இந்தக் கட்டுரை, மிக முக்கியமான ஒன்று.